கோடநாடு கொலை வழக்கு ஜூலை 28ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல உள்ளதால் கால அவகாசம் கோரியது சிபிசிஐடி. இதன் காரணமாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை நீதிமன்றம் ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று அதிமுகவில் இருந்தே குரல்கள் எழுந்துள்ளன.

கோடாநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே முடியாதா என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த வழக்கு விசாரணை எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. இந்த வழக்கை முதலில் நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து வந்த நிலையில் பின்னர் இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிசிஐடி வசம் சென்றது.

சிபிசிஐடி தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது விசாரித்து நீதிபதி நாராயணன் வழக்கை இன்று ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்படி கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் இருந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை ஜுலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.