அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.

எனவே, அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல, தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.