இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி எனவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது எனவும் இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், அமெரிக்கா – இந்தியா நட்பு இடையேயான உறவு அப்படியே உள்ளது. அமெரிக்கா – இந்தியாவுக்கான காலத்தில் அதிக முன்னேற்றங்களை பார்த்து இருக்கிறோம். துடிப்பு மிக்க ஜனநாயகத்தை கொண்ட நாட்டின் குடிமகனாக நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். சபாநாயகரே உங்களுக்கு மிகவும் கடினமான பணி உள்ளது. ஆலோசனைகள் மற்றும் சித்தாந்தங்களின் விவாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு வலுவான இருதரப்பு ஒருமித்த கருத்து தேவைப்படும் போது உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் முதலில் பிரதமராக அமெரிக்கா வந்த போது, இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக விளங்கியது. ஆனால், இன்று இந்தியா 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. விரைவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்தியா வளரும் போது மொத்த உலகமும் வளரும். உக்ரைன் மோதலால் ஐரோப்பாவில் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் கடும் வேதனையை இந்த போர் கொடுக்கிறது. வல்லமை பொருந்திய நாடு இதில் ஈடுபடுவதால் விளைவுகளும் கடுமையாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது போல இது போருக்கான தருணம் இல்லை. இது பேச்சுவார்த்தை ராஜ்யரீதியிலான உறவுக்கான காலம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஏற்பாட்டில் என்.எஸ்.எப். என்னும் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வித்துறையிலும், ஆராய்ச்சித்துறையிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கு 5 அம்ச திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:-

இந்தியா, பல்வேறு திட்டங்களில் தேசிய அறிவியல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்ததற்காக ஜில் பைடனுக்கு நன்றி. வளர்ச்சியின் வேகத்தைத் தக்க வைப்பதற்கு, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள திறமைகளின் ஒத்துழைப்பை உறுதி செய்வது முக்கியம் ஆகும். இந்த பத்தாண்டுகளை தொழில்நுட்ப பத்தாண்டுகளாக உருவாக்குவதே எனது இலக்கு ஆகும். இந்தியா இளைஞர்களின் பட்டாளத்தைக் கொண்டுள்ளது, இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேருவது உலகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.