ஆளுநர் ரவியை திரும்பப்பெறக் கோரி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கியுள்ள துரை வைகோ, நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள் வாங்க வேண்டும் என மதிமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இது தொடர்பாக துரை வைகோ கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவருக்கு முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் முயற்சியை மதிமுக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து முன்னெடுத்து வருகிறது. ஒரு கோடி கையெழுத்தை மக்களிடம் ஒரு மாதத்திற்குள் பெறுவதற்கு நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள் பெற வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியும் தங்களுடைய இலக்கை திட்டமிடவேண்டும். அதற்கு ஏற்ற வழிமுறைகளையும் இலக்கையும் துணைப் பொதுச்செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் கலந்து திட்டமிடுவார்கள்.
இலக்கை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வார இறுதியிலும் அதுவரை கையெழுத்து வாங்கப்பட்ட விபரங்களை மாவட்டச் செயலாளர்கள் என்னிடம் அல்லது வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர்) அவர்களிடம் WhatsApp மூலம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட கையெழுத்து விவரங்கள் ஒவ்வொரு வாரமும் பொதுச்செயலாளர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். கையெழுத்து வாங்கும் போது ஏன் வாங்குகின்றோம் என்பதை விளக்கி துண்டறிக்கை மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களாகிய வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், கடைத் தெருக்கள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றுக்குச் சென்று காரணங்களை விளக்கி பொது மக்களிடம் கையெழுத்துப் பெற வேண்டும். எனவே இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைந்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை முழு வீச்சுடன் நடத்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.