மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு: வன்னியரசு

இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்லி உள்ளார். மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21.6.2023 அன்று ஐ.நா சபை வளாகத்தில் யோகா தின விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஒருவர், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு திரு.மோடி கண்களை விரித்து, “நீங்கள் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சனநாயக நாடு. ஜனநாயகம் எங்கள் ரத்தத்தில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசித்துக் கொண்டே வாழ்கிறோம். இது எங்கள் அரசியலமைப்பிலேயே உள்ளது. மனித உரிமைகள் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகமாக வாழும்போது அங்கு பாகுபாடு என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார்.

திரு.மோடியின் இந்த பதிலை கேட்ட அமெரிக்க ஊடகவியலாளரே சிரித்து போயிருப்பார். ஏனென்றால், இந்தியாவில் நடக்கும் மத மோதல்களையும் சாதி மோதல்களையும் ஊக்கப்படுத்துபவராகவே மோடி இருந்துள்ளார் என்பதை பிபிசி ஆவணப்படம் அம்பலப்படுத்தியது. இதை மையப்படுத்தியே அமெரிக்க ஊடகவியலாளர் அந்த கேள்வியை எழுப்பி இருக்கக்கூடும். ஆனால், திரு.மோடியோ எது குறித்தும் கவலை கொள்ளாமல் ஐநா வளாகத்தில் பொய்யை சொல்லி உள்ளார். அதுவும் மணிப்பூரில் கிறித்தவ குக்கிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பட்டமான பொய்யை துணிந்து சொல்லியிருப்பது பிரதமருக்கே அழகா? இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கள்ளமவுனம் காப்பது ஞாயமா?

அதை விட இந்திய நாடாளுமன்றத்தில் மத மோதல்கள் குறித்த கேள்விக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்ற மத மோதல்களை பட்டியலிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். கடந்த மார்ச்29, 2022 அன்று உள்துறை அமைச்சர் அமிதஷாவே மத மோதல்கள் நடப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அது மட்டுமல்ல, ஜெய்ஶ்ரீராம் முழக்கமிடச்சொல்லி சங்பரிவாரக் கும்பலால் நடத்தப்படும் கும்பல் படுகொலைகளை மறைக்க முடியுமா? மாட்டுக்கறி வைத்திருந்ததாக வீட்டுக்குள் புகுந்து கடந்த செப்டம்பர் 28, 2015 அன்று முகமது அக்லாக் சைபியை படுகொலை செய்ததை மறைக்க முடியுமா? இப்படியான மத பயங்கரவாத படுகொலைகளுக்கு ஊடாக, சாதியின் பெயரால் இந்தியா முழுக்க நடக்கும் ஆணவப் படுகொலைகளை பட்டியலிட்டால் திரு.மோடி பதில் சொல்ல முடியுமா? மோடியின் அமெரிக்க பேச்சு என்பது பொய்களால் தயாரிக்கப்பட்ட ஏமாற்று உரை. இந்தியாவின் அவமானங்களாக இருக்கும் சாதி, மத மோதல்களை தடுக்க முடியாத பிரதமர் இந்தியாவில் மோடியாக மட்டுமே இருக்க முடியும். மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.