அமித் ஷா மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு, மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

சிவகங்கை அருகே நாலுகோட்டை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் எம்.பி மேம்பாட்டு நிதியில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக பாதையில், அரசியல் சாசனத்தை மதிக்கும், அனைத்து மக்களையும் அரவணைக்கும் மத்திய அரசு அமைய வேண்டும் என்பதற்காக பாட்னாவில் 15 கட்சிகளின் தலைவர்கள் கூடினர். கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் மட்டுமே ஒன்று கூடினர். சேர விரும்பாத கட்சிகள் கூட்டத்துக்கு வரவில்லை. காங்கிரஸை மையமாக வைத்து பலமான கூட்டணி அமையும். தமிழகம், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் கட்சிகள் கூட்டத்தை கொச்சைப்படுத்தியது அரசியல் நாகரீகம் அல்ல. இதை விடுத்து அவர் மணிப்பூரை கவனிக்க வேண்டும். அங்கு நடைபெறும் கலவரத்தால் ராணுவம், போலீஸார் நுழைய முடியவில்லை. அங்குள்ள அரசை நீக்குவதற்கு தைரியம் இல்லை. மேலும், மணிப்பூர் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எங்களது முன்னாள் முதல்வரை பேசக் கூட விடவில்லை. அதனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.