அதிமுகவை உடைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். அதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக மட்டுமே நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிற இயக்கமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவான இயக்கம். சேலம் மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை கொடுத்தார்கள். ஆனால் 2021-ல் 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்து பிரச்னை செய்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
இன்றைய தினம் பயிர் வளர களையெடுப்பது போல, களையாக இருந்தவர்கள் அதிமுகவில் இருந்து களையெடுக்கப்பட்டுவிட்டார்கள். எனவே அதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் தான் அதிமுக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை உடைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்திற்கு என எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தார் சாலை அதிகமுள்ள மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் எடுக்க அதிமுக ஆட்சியே காரணம். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளை பெற்றோம். ஆனால் திமுக ஆட்சியில் எந்த விருதுகளையும் பெறவில்லை. உள்ளாட்சித் துறையில் மட்டும் 140 விருதுகள் அதிமுக ஆட்சியில் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் மட்டும் 14 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் புதிய பேருந்து ஒன்று கூட வாங்கப்படவில்லை. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது.
டெண்டர் விடாமல் 3 ஆயிரம் பார்கள் செயல்படுகின்றன. 24 மணி நேரமும் பார்கள் இயங்குகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜி பற்றி விமர்சித்து விட்டு தற்போது அவருக்கு ஆதரவாக பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற உத்தரவின்படியே செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் பழிவாங்கல் எதுவும் இல்லை. நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஒரு கைதியாக இருக்கிறவர் அமைச்சராக இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்திருக்க அவர் என்ன தியாகம் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். திமுக ஆட்சியில் எல்லா துறையும் வளர்ந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஊழல் செய்வதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர் ஆளுகின்ற கட்சி. திமுகவைப் போல குடும்ப அரசியல் கிடையாது. உங்கள் ஆட்சி விரைவிலேயே கவிழும். பல பேர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
தமிழ்நாட்டில் சாதனைப் படைத்தது போல தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் சென்று விட்டார். கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வந்து விட்டார். இங்கேயே திறமையாக ஆட்சி செய்ய முடியாதவர் பிரதமரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளித்து திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி அடிப்பார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக எந்த கோரிக்கைக்காகவும் குரல் கொடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்னைக்கு 23 நாட்கள் பாராளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினார்கள். திமுக எம்.பிக்களால் ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை முடக்க முடியுமா. காவிரி பிரச்னையில் சட்டப் போராட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.