மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த 21ஆம் தேதி இரவு 7 மணியளவில் தித்திம் சாலையில் பவுகாக்சான் இகாய் அவாங் லெய்காய் மற்றும் வாக்த ஆகிய பகுதிகளை அடுத்த பாலம் ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஸ்கார்பியோ ரக நான்கு சக்கர வாகனம் ஒன்றில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால், பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குண்டுவெடித்ததில், பாலத்தின் மேற்கு பகுதியில் சில இடங்கள் கடுமையாக சேதமடைந்தன. 3 சிறுவர்களுக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பவுகாக்சான் இகாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), வெடிக்கும் பொருள்கள் சட்டம் மற்றும் பிடிபிபி சட்டம் 1984 தொடர்புடைய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, குண்டு வெடித்த வாகனம் சுராசந்த்பூர் பகுதியில் இருந்து வந்துள்ளது என தெரியவந்தது. மணிப்பூரில் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப் பகுதி முழுவதும் ஊடுருவல்காரர்களின் தொடர்பு பெரிய அளவில் உள்ளது என சந்தேகிக்கப்படும் சூழலில், தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று கூடியது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு வழக்குஎன்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை என திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்ப்பில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து கட்சியினரும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்ததும் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:-
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினோம். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு உள்ளது. ஆனால், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் மோடி இதுவரை கருத்து தெரிவிக்காதது கவலை அளிக்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை? அமைதியை நிலைநாட்ட எடுத்த நடவடிக்கை பலனிக்காதது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளை மணிப்பூர் அனுப்பி மக்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.