அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.
திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. பலரும் ஒன்று கூடி உள்ளார்கள். இது தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. கூடிவிட்டு எல்லோரும் கையைத் தூக்கிவிட்டதால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடுமையான கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பெட்டிகளை கழற்றி விட்ட பின் அ.தி.மு.க. ரெயில் சென்று கொண்டிருக்கிறது.
தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம். எங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; வந்தால்தான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றி தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.