ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ், மலைப் பிரதேச கிராம மக்களுக்கும், முதன்மை சுகாதார மையங்களுக்கும் இடையே பாலமாக இருந்து சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துபவர்கள் ஆஷா பணியாளர்கள், அதாவது ஏற்பளிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists). குழந்தை பிறப்பு விகிதக் குறியீடு, தாய் சேய் நலனைக் குறிக்கும் குறியீடு ஆகியவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்றால், அதற்குக் காரணமானவர்களாக விளங்குபவர்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆஷா பணியாளர்கள். மேற்படி பணியாளர்கள் ‘செயல்பாட்டாளர்கள்’ ஆஷா என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் மத்திய அரசு திட்டத்தின்கீழ் 24 மணிநேரமும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள். இருப்பினும், பணியாளர்கள் என்ற அந்தஸ்து இல்லாமல் “செயல்பாட்டாளர்கள்’ என்ற முறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 2,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும் என மாதம் 3,500 ரூபாயினை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கினாலும், மத்திய, மாநில அரசின் சுகாதாரத் திட்டங்களைத் தான் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை என்று ஆஷா பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, சுகாதாரம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ள நிலையில், சுகாதாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்கின்ற ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் என எதையும் தராமல் இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு குறைந்தபட்ச ஊதியமாக 24,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று நிர்ணயித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் மாதத் தொகுப்பூதியமாக 24,000 ரூபாய் தங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், தங்கள் பணியை வரைமுறை செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் எல்லாம் ஆஷா பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 2,650 ஆஷா பணியாளர்கள் உள்ளதாகவும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதன் அடிப்படையில் தங்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன். மாதம் வெறும் 3,500 ரூபாய் என்பது அவர்களுடைய போக்குவரத்திற்குகூட போதுமானதாக இருக்காது. மேலும், மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்களுக்கு மாநில அரசின் சார்பில் எந்தத் தொகையும் வழங்கப்படாதது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 2020 ஆம் ஆண்டு ஆஷா பணியாளர்கள் கோரிக்கை மாநாடு நடத்தியபோது, அந்த மாநாட்டிற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்து 45 வயதிற்குள் இருக்கும் ஆஷா பணியாளர்களை கிராம சுகாதார செவிலியர்களாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்ததாகவும், இது தொடர்பாக முதலமைச்சரிடம் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஷா பணியாளர்களின் உழைப்பினையும், அவர்களது தரப்பில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை அழைத்துப் பேசி, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தற்போது இருக்கும் அவர்களுடைய மதிப்பூதியம் மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.