தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் காத்திருக்கிறார்கள்: ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்தையூரில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ராமராஜ், கிளைச் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சரவணகுமார், பொருளாளர் ராமசாமி மற்றும் பரமதேவர், பாலமுருகன் ஆகியோர் வரவேற்று பேசினர். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. கொடுத்தது. ஆனால் அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கூட மக்களுக்கு சரியாக பணம் வழங்கப்படவில்லை. மக்களின் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறும் தி.மு.க. அரசு, கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்ததை எப்படி மாற்றுவது என்று கவலைப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே கூறி உள்ளார். மக்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்கே பாடுபட்டு வருகிறார்.

இதே செந்தில் பாலாஜியை பற்றி எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவர் ஊழல் செய்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க.வில் சேர்ந்தவுடன் செந்தில் பாலாஜியை உத்தமர் போல் பாராட்டுகிறார். கவர்னர் டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்குமா என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நான் மோடிக்கும் பயப்பட மாட்டேன், ஈ.டி.க்கும் (அமலாக்கத்துறைக்கு) பயப்பட மாட்டேன் என்று கூறும் உதயநிதி கூறுகிறார். ஆனால் அவர் மோடி மேல் மிகுந்த பயத்தில் உள்ளார்.

பீகார் பாட்னாவில் நடந்த எதிர்கட்சி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை. எனவே அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்து உள்ளது. அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தோல்வி முகத்துடன்தான் தமிழகம் திரும்பி உள்ளார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்வதால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்பட போவதில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் தங்கள் மீதும், தங்களது குடும்பத்தினர் மீதும் மத்திய அரசினுடைய விசாரணை வளையத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதாக தான். இதுதான் அவர்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.