செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கைது உத்தரவில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பிரிசீலிக்கவில்லை. மனுவை முறையாக பரிசீலிக்காம நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பாஜக அண்ணாமலை பேசி வருகிறார். 2022 ஆகஸ்ட் முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசி வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும்முன், சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. சம்மனை பெற செந்தில் பாலாஜி மறுத்தார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறுவழியின்றி கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவலளிக்கப்பட்டது. சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பெருந்தொகை டெபாசிட் செய்யப்படடது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.