சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று விபி சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக மாநில கல்லூரி வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் 110-வது கீழ், சென்னையில் விபி சிங் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். விபி சிங்குக்கு சிலை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங், பூமிதான இயக்கத்தில் பங்கேற்றவர். அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவு, நிதித்துறை அமைச்சர் என உயர் பொறுப்புகளை வகித்தார். 1989-ல் தேசிய முன்னணியை உருவாக்கி, நாட்டின் பிரதமரானார். சுமார் 11 மாதங்களே அவர் பிரதமராக இருந்தாலும், அவரது சாதனைகள் மகத்தானவை. பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, நுகர்வோர் பாதுகாப்பு என அவரது பதவிக் காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார்.
தந்தை பெரியாரைத் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட வி.பி.சிங், கருணாநிதியை சொந்த சகோதரனைப்போல மதித்தார். 1988-ல் சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவில், மாபெரும் ஊர்வலத்தை தலைமை வகித்து நான் நடத்தி வந்தேன். வி.பி.சிங் பிரதமரான பின்னர் அதற்காக என்னைப் பாராட்டினார். அவர் அளித்த ஊக்கம் காரணமாகத்தான், சமூகநீதிப் பார்வையில், சமூகநீதிப் பயணத்தில் சலனமும், சமரசமும் இல்லாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்லிவந்த மத்திய அரசை, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான். இதை மனதில் கொண்டுதான், தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்.
சிஆர்பிஎப் தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். தற்போது, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சிஆர்பிஎப் உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளும் நடைபெறும் என்ற செய்தி வந்துள்ளது. அந்த வகையில், சமூகநீதிக் கொள்கையை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங். காவிரி நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்தவர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டினார். அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், சென்னையில் அவரதுமுழு உருவச் சிலை அமைக்கப் படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.