டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்: அமைச்சர் முத்துசாமி!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வரும் என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையோடு அதிரடியாக வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் தற்போத அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி வசம் கூடுதலாக வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களா டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக டாஸ்மாக்கில் வசூலிக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் தான் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பற்றியும் அவர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை கேட்ட அமைச்சர் முத்துசாமி அதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசி நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

மேலும் அமைச்சர் முத்துசாமி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் எச்சரிக்கை விடுத்தார். அதாவது டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி விலையில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்க கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பான புகார் தொடரும் பட்சத்தில் பணியாளர் மீது காவல் துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு விற்பனையாளர் பணி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட கூடாது. டாஸ்மாக்கில் வீடியோ எடுத்து பதிவிடுவதை அனுமதிக்க கூடாது. இதுபற்றி விற்பனையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதோடு இதுதொடர்பாக விரைவில் சுற்றறிக்கை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதற்கிடையே தான் இன்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், ‛‛தமிழ்நாட்டில் சில இடங்களில் உள்ள டாஸ்மாக்கில் தவறுகள் நடந்துள்ளது. 2 சதவீதம் முதல் 5 சதவீதம் அளவுக்கு தவறு நடந்ததை வைத்து மொத்தமாக நடப்பதாக பரப்புகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேற்று கூட நடவடிக்கை எடுத்தோம். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் டாஸ்மாக் கடையை செ்னறு பார்த்தோம். பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200 பேரிடம் பேசியுள்ளேன். அவர்களுக்கு உள்ள சிக்கலை தெரிவித்து உள்ளனர். அதனை சரிசெய்வதாக கூறியுள்ளோம். இனி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.