அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கே சென்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த வழக்கின்படி அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது. ஆனால் நீதிமன்றமோ அவருடைய சிகிச்சைக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாதவாறு அவரை 8 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி அளித்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த செல்லும் போது அவருக்கு ஏதாவது சிகிச்சை அளிக்கப்பட்டே இருந்ததால் அமலாக்கத் துறையினர் விசாரிக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. முதலில் ஐசியூவில் செயற்கை சுவாசத்தில் இருந்த செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார் என்றும் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையே நடைபெறவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் நேருவுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பது அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாகியுள்ளது. அப்படியென்றால் அரசு மருத்துவமனையில் தரமில்லை என தமிழக அரசு ஒபபுக் கொள்கிறதா. அமைச்சர் என்றால் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் என்றால் ஒரு நிலைப்பாடா. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவே இல்லை என பலரும் கூறுகிறார்கள். ஆகவே இதை அமலாக்கத் துறை விசாரித்து தெளிவுப்படுத்த வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.