இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுனர் ஏற்க மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் காலை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி கோரி முதல்வர், ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகல் தள்ளிவைத்தனர்.
வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் – ஆளுநருக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து ரகசியமானது என்பதால் அந்த கடிதத்தை சமர்ப்பிக்க இயலாது என்று கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பத்திரிகை செய்திக் குறிப்பில் முதல்வர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது என்றார்.மேலும், ஆளுநர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்; ஆளுநர் கருத்துக்கு என்ன மதிப்பு உள்ளது எனவும், கடந்த மே மாதமே ஆளுநர், செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுனர், முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், தற்போது ஆளுநர் – முதல்வர் இடையேயான கடிதப் போக்குவரத்துக்களை சமர்ப்பிக்க ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும், பத்திரிகை செய்தி அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், ஆளுநர் தரப்பில் இருந்து உத்தரவு ஏதும் இல்லாமல் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்த தலைமை நீதிபதி, ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை கேள்வி எழுப்ப முடியாது எனவும், அந்த உத்தரவை சமர்ப்பிக்கும்படி ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க கோரி கோ – வாரண்டோ வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் சேர்த்து ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.