மத்திய அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது: மம்தா பானர்ஜி

வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்காள மாநிலம் கூச் பிகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தின் மீதான அக்கறையின்மை காரணமாக, நமக்கு வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல், மாநில மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல், மேற்கு வங்காள மக்களின் வாழ்வைப் பாதிக்கிறது. அவர்கள் தங்களின் ஒடுக்குமுறை உத்திகளால் எங்களின் உத்வேகத்தை தடுத்துவிட முடியாது. நமக்கு உரிய நிதியைப் பெறாமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, கொடுங்கோல் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி, வருகிற பஞ்சாயத்து தேர்தலில் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் அவர்களைத் தோற்கடிப்போம்.

மத்தியில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு மகா கூட்டணியை உருவாக்குவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். ஆனால் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மோசமான உறவை நான் முறியடிப்பேன். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.