ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜி காயம்!

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜல்பைகுரியில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பின்னர் பஹ்டொக்ரா விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அங்கு மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக பைகுந்தபூர் வனப்பகுதியில் சிவோக் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி சாலை மார்க்கமாக பஹ்டொக்ரா விமான நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து விமானத்தில் கொல்கத்தா வந்த அவர், எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் வெளியிட்ட செய்தியில், “ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கத்தின் போது மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்து வருகின்றனர். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. காயங்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் இருந்து சிகிச்சை மேற்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்” என்றார்.