நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எதிராக நான் பேசவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று சொன்னபோது நான் வரவேற்றேன். தற்போது விஜய் அரசியலுக்கு வருவார் என்று யூகங்களால் எழுதியபோதும் அதை நான் வரவேற்றேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல மேடைகளில் கலைஞர்கள் கூட பாடியிருக்கிறார்கள். ‘தமிழர்கள் தங்கள் முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள்’ என்று. அதற்கு காரணம் தமிழக அரசியல் நீண்ட காலமாகவே திரையுலகத்தை சார்ந்ததாக இருக்கிறது. திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை.
அந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார். மற்ற மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்கள், யாரும் கடைசி காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் கிடைத்த செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வரலாம், அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற கணக்குகளில் மற்ற மாநிலங்களில் யாரும் செயல்படவில்லை. இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேன். இது நடிகர் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் இல்லை. பொதுவான விமர்சனம். நல்லகண்ணு போன்ற தலைவர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் விடுதலை போராட்ட காலத்தில் சந்தித்த கொடுமைகள் மற்றும் சிறைச்சாலை சென்றது பற்றி நாம் அறிவோம். 98 வயதிலும் அரசியல் மேடைகளில் பேசுகிறார். அவர் தொடாத பிரச்சனை இல்லை. அவர் போராடாத களங்கள் இல்லை. இதுபோன்ற எந்த பங்களிப்பும் இல்லாமலேயே ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற உளவியலை நான் சுட்டிக்காட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.