மத்திய அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் தான் நிற்கிறது: ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு சில இடங்களில் உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு, அது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள் மீது நிற்பது தான் காரணம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மோடி அரசின் ஒன்பது ஆண்டுகள் சாதனைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுரைக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இன்னாள் நிதியமைச்சருக்கு பதில் அளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் சாதனைகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் மேற்கோள் காட்டிய பல எடுத்துக்காட்டுகள் உண்மையானவை. 5 அல்லது 10 வருடங்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் உண்மைகளை தெரிவித்ததைப் போல இவையும் உண்மையே. மத்திய அரசை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற வழக்குகளில் எதிர்க்கட்சிகள் தோல்வியைச் சந்தித்தன எனக் கூறி 5 உதாரணங்களை எடுத்துக் கூறியுள்ளார். அவர் கூறியவைகளில் மூன்று தவறானவை. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் முத்தலாக்-ஐ சட்டவிரோதம் எனக் கூறியது. சட்டப்பிரிவு 370 வழக்கு, உச்சநீதிமன்றத்தால் இன்னும் விசாரிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி சட்டம் குறித்து பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

பால், தேன், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் நாடு முதல்நிலையை அடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலையை அடைந்து விட்டோம். நாம் அதனைத் தக்கவைத்துக் கொண்டோம்.

நேரடி பணப்பரிமாற்ற பலனுக்கான பெயரை நிதியமைச்சர் கோருகிறார். ஆனால் ஆதார் ஐமுகூ அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும், நேரடி பணப்பரிமாற்ற பலன் ஐமுகூ ஆட்சியில் தான் நடந்தது என்பதையும் அவர் மறந்து விட்டார்.

இந்த ஆட்சியில் 11.72 கோடி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். அவைகளில் எத்தனை பயன்பாட்டில் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையால் எத்தனைக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்ற அவரின் சொந்த அரசின் அறிக்கையை அவர் ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிகாலத்திலும் சிலபல சாதனைகள் எட்டப்படும். மோடி அரசும் அவ்வாறே செய்துள்ளது. என்றாலும் மோடி அரசு சில இடங்களில் உயர்ந்து நிற்பதாக கருதினால் அது, முந்தைய ஐமுகூ அரசின் தோள் மீது நிற்பதே காரணமாக இருக்கும்”. இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.