சீமானும், எச்.ராஜாவும் ஒரே மேடையில் இருந்தால் அது கலியுகம்தான்: கார்த்தி சிதம்பரம்

பொதுசிவில் சட்டத்தை எளிதில் கொண்டு வர முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

இந்தியாவில் மற்ற கட்சிகளில் உள்ளோர் ஊழல்வாதிகள் என்றால், பாஜக மட்டும் புனித கட்சி என்று பிரதமர் மோடி சொல்கிறாரா? இது கொச்சையான விமர்சனம். பாஜகவில் ஒருவர் சேர்ந்து விட்டால் அவர் புனிதர் என்றும், மாற்று சிந்தனையோடு மற்ற கட்சிகளில் இருந்தால் அவர் ஊழல்வாதியா?

மோடி தன்னை பற்றி உலக அரங்கில் புகழ்ந்து பேச வேண்டும் என விரும்புகிறார். ரயில் மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் செல்வதாக புகழ்ந்து பேசுகிறார். ஆனால் சாதாரண பயணிகளின் பாதுகாப்பை கண்டுகொள்வதில்லை. இதனால்தான் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது. இதுவரைக்கும் அந்த விபத்தில் இறந்தவர்களின் கணக்கு விவரங்கள் முறையாக வெளியிடவில்லை. இந்த விபத்துக்கு மத்திய அரசின் கவனக்குறைவு தான் காரணம்.

சீமானும், எச்.ராஜாவும் ஒரே மேடையில் இருந்தால் அது கலியுகம்தான். பொது சிவில் சட்டம் தற்போது தேவையில்லை. ஏனென்றால் பாஜக, முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டுமென நினைக்கிறது. பரந்த மனப்பான்மையோடு அனைத்து மதங்களிலும் உள்ள குளறுபடிகள், வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமில்லை. மேலும் யாரையாவது தாழ்மைப்படுத்தியோ, ஒடுக்குவதாக இருந்தால் அதை மாற்ற வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் பாஜக முறையாக சீர்த்திருத்தம் செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்துக்களில் கூட பல பழக்க வழக்கங்கள் உள்ளன. இதனால் எளிதில் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது. நாட்டை மதம் ரீதியாக பிரிக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களை ஓரம் கட்ட வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.