அண்ணாமலையும், நாராயணன் திருப்பதியும் மென்ட்டல் கேஸ்களை போல பேசி வருகிறார்கள் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அதில், “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா” என அவர் கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவில் எரிமலையாக வெடித்தது. அதிமுக தலைவர்கள் பலர் அண்ணாமலையை ஏக வசனத்தில் விளாசித் தள்ளினர். இத்தனை நடந்த பிறகும் பாஜக உடனான கூட்டணியை முறிக்க அதிமுக தயங்கி வருவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரான பொன்னையனிடம் தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து பொன்னையன் பேசியதாவது:-
முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை, அம்மாவை (ஜெயலலிதா) பற்றி பேசிய பேச்சு மனிதப்பண்புகளை மீறிய ஒன்று. மோடியா இந்த லேடியா என்று சவால்விட்டு, அகில இந்திய அளவில் அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த அம்மா மீது புழுதி வாரி போடும் விதமாக தொடரப்பட்ட பொய் வழக்கு அது. ஜெயலிதாவை வீழ்த்த அன்றைக்கு அகில இந்திய அளவில் பெரிய அளவில் சூழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜகவும் விதிவிலக்கு அல்ல. பாஜகவை பொறுத்தவரை அது ஒரு மிகப்பெரிய சூழ்ச்சிக்கார கட்சி.
பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளுடன் முதலில் பாஜக ஒட்டிக்கொள்வார்கள். பின்னர் அந்தக் கட்சிக்கு எதிராகவே யாரையாவது விட்டு வழக்கு போட சொல்லி, அதை சிபிஐ விசாரணை வரை கொண்டு சென்று பின்னர் அந்தக் கட்சியை காலியாக்கி விடுவார்கள். பின்னர் அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்வார்கள். அத்தகைய சூழ்ச்சிமிகுந்த அரசியலுக்கு சொந்தக்காரர்கள்தான் பாஜகவினர் என்பது நாடறிந்த உண்மை. தமிழகத்திலும் அப்படி தாங்கள் வந்துவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சுயமரியாதை பேசும் திராவிட மண்ணான தமிழகத்தில் பாஜக என்றைக்குமே காலூன்ற முடியாது என்பதுதான் உண்மை.
அம்மாவை பற்றி அவதூறாக அண்ணாமலை பேசிய பேச்சு அதிமுகவினரை துடிதுடிக்க வைத்துள்ளது. பாஜகவுடன் நாங்கள் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்கவில்லை. தன் முதுகில் உள்ள அழுக்கை பாஜக பார்க்க வேண்டும். அதானி ஊழல் சாதாரண ஊழலா? இந்த ஊழலில் பாஜகவுக்கும் அளப்பரிய லாபம் கிடைத்தது.. மோடி அரசுக்கும் லாபம் கிடைத்து என ராகுல் காந்தி சொல்லவில்லையா? இதை ஆதாரத்துடன் நாடாளுமன்றத்தில் அவர் நிரூபிக்க முயன்றதால், சாதாரண வழக்கின் மூலம் அவரது எம்.பி. பதவியை பறிக்கவில்லையா? எனவே ஊழல் பற்றி அண்ணாமலை பேசுவதற்கு முன்பு மோடி மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு என்ன? பாஜக அரசுகள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன? என்று தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுகவுக்கு பலம் என்று பைத்தியக்கார ஆஸ்பத்திரி நோயாளி போல அண்ணாமலை பேசி இருக்கிறார். அவர்களுக்கு தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததே அதிமுகவின் தயவால்தான் என்பதை சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதே சமயத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தாலேயே இஸ்லாமியர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவ தலித்துகள் மத்தியிலும் அதிமுகவுக்கு தொய்வு ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே அண்ணாமலையை பொறுப்பில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு தமிழக மண்ணின் யதார்த்தை தெரிந்து வைத்தவர்களை தலைவராக்கவில்லை என்றால் அந்தக் கட்சி காணாமலே போய்விடும்.
அண்ணாமலையும், நாராயணனும் மென்ட்டல் கேஸ்களை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற தத்துவத்திற்கு நாராயணன் சொந்தக்காரர் என பாஜகவினரே காறி துப்பும் காலம் உருவாகி வருவதை அவர் விரைவில் உணரும் நேரம் வரும். பாஜகவை அழிக்கக்கூடிய ஒரு விஷ சக்தியாக அண்ணாமலை வளர்ந்து வருகிறார். அண்ணாமலை பைத்தியக்காரர் போல பேசுவதால், பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து போவதாக அர்த்தம் கிடையாது. அந்த மென்ட்டல் கேஸ் பேசுவதை நாம் உதாசீனப்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்னையன் கூறினார்.