மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் மோடி இன்னும் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி மணிப்பூர் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறாமல் இருப்பதன் பின்னணியில் சீனா உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். நிலப்பரப்பில் மிகவும் சிறிய மாநிலமாக உள்ள மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூர் மிகவும் பதற்றமாக உள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நடந்து வருகிறது. அதாவது மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களுக்கு இடையேயான மோதல் என்பது வன்முறையாக மாறியுள்ளது. இதில் குக்கி இனக்குழுவினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதேபோல் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு குக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை தான் இரு இன மக்களிடையேயும் வன்முறையாக மாறி உள்ளது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர் உள்பட அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் அனைத்து கட்சி கூட்டத்தை கூடி விவாதித்தார்.
இதற்கிடையே தான் இந்த வன்முறையின் பின்னணியில் சீனா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீனாவின் தூண்டுதலினால் தான் வன்முறை என்பது கட்டுக்கடங்காமல் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இதற்கு காரணம் பர்மா [மியான்மர்] வழியாக சீனா வழங்கும் ஆயுதங்களால் மைதிக்கு(இந்து) எதிரான மக்கள் குறிவைக்கப்படுவது தான். முன்னதாக லடாக்கில் சீனா நம் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மோடி அச்சமடைந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் சீனாவானது, மியான்மர் மூலம் மைத்தேயி மக்கள் மீது தாக்குதல் நடத்த ஆயுதம் வழங்குகிறது. சீனாவுக்கு பயந்து தான் பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தொடர்ந்து அமைதியாக இருக்கிறார் என சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.