சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் ஆசாத். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பீம் ஆர்மி என்ற தலித் உரிமைகள் அமைப்பைத் தொடங்கி, இந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். ஆசாத் சமாஜ் கட்சி – கன்ஷிராம் என்ற கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார் சந்திரசேகர் ஆசாத். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி அமைப்பு பங்கேற்றது. சந்திரசேகர் ஆசாத் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் ஆசாத்.

இந்நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பும் வழியில் தியோபந்த் பகுதியில் மர்ம நபர்கள் சந்திரசேகர ஆசாத்தின் காரை நோக்கி சுட்டுள்ளனர். இரண்டு தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், சந்திரசேகர் ஆசாத்தின் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. மற்றொன்று காரின் பின் கதவில் பாய்ந்தது. இந்த தாக்குதல் குறித்து பீம் ஆர்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர் ஆசாத், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், சந்திரசேகர் ஆசாத் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தைக் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.