கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம்: ஈபிஎஸ்!

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ரோஜா ராஜசேகர் தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ரோஜா ராஜசேகர். 58 வயதான இவர் தனது கடையில் திருட்டு நகையை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை வந்து நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ரோஜா ராஜசேகர், நேற்று இரவு ரயில் முன் பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரோஜா ராஜசேகர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசை விடியா அரசு என்றும் முதல்வர் ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அரசையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் தூக்கிப் பிடித்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் ரோஜா ராஜசேகர் என்பவர் காவல்துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அவருடைய மனைவியையும் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான திரு. ராஜசேகர் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, போராட்ட குணம் உள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ராஜசேகர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர்களுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.