மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். இந்நிலையில், ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சென்ற அண்ணன் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய அம்மாநில காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். முக்கியமான பிரச்சினையில் பிரதமர் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் மக்களுக்கு காது கொடுக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அங்கு அமைதியை மீட்டெடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான எதேச்சதிகாரர்களின் இத்தகைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் அபத்தமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.