தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதையடுத்து அவரது இலாகாக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முத்துச்சாமி வசமும் ஒப்படைக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதோடு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக நாங்கள் இதை சந்திப்போம்” என்று முதல்வர் பதில் தெரிவித்தார்.