உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார்: வானதி சீனிவாசன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார் என்பது மட்டும் நிச்சயமா சொல்ல முடியும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இல்லத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். அப்போது, குடும்ப அரசியல் குறித்த விமர்சனத்துக்கு பதிலடி தந்திருந்தார். அப்போது, “பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு குடும்ப அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.. பிரதமர் சொன்னதுபோல, திமுக என்பது ஒரு குடும்பம் தான். திமுகவினர் குடும்ப குடும்பமாக அரசியல் நடத்தி வருவது நிஜம்தான்.. திமுகவினர் குடும்ப குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம். திமுக மாநாட்டிற்கு என்றாலும், போராட்டத்திற்கு என்றாலும் வருபவர்கள் எல்லாருமே குடும்பம் குடும்பமாக தான் வருவார்கள். தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம்தான்.. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும், மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பொது சிவில் சட்டம்.. வரும் எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்பது உட்பட பல்வேறு விஷயங்களை முதல்வர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் இந்த பேச்சை, பாஜகவின் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசியதாவது:-

கல்யாணத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் விடுவது, இதெல்லாம் தான் திராவிட மாடலா? நல்ல இடங்களுக்கு சென்று, இப்படித்தான் அரசியல் பேசுறதா? இதெல்லாம் அநாகரீமாக செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். குடும்ப வாரிசு அரசியல் நடத்தும் திமுக குறை சொல்ல அருகதை கிடையாது.. பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை என்று சொல்லுங்கள்.. வாரிசு என்ற காரணத்திற்காகப் பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். மகன் என்பதால்தான், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது..

அம்பேத்கர் வழங்கிய சட்டத்தின் ஒரு அங்கம் தான் பொது சிவில் சட்டம்.. பொது சிவில் சட்டம் அனைவருக்கும் என்பதற்கான கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.. பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை.. ஜம்முவிற்கு 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது, இதனால் அந்த மக்கள் ஜனநாயகத்திற்கு திரும்பிக்கொண்டு உள்ளார்கள். பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதியை பாஜக தெரிவித்திருக்கிறது. முத்தாலக் சட்டம் ரத்து இஸ்லாமிய பெண்களுக்கு நீதியை தந்தது. சுயநல அரசியலுக்காகப் பெண்கள் வாய்ப்பை பறிக்கக்கூடாது.

இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு சிதம்பரம் கோயில் விவகாரத்தில் வேலை செய்கின்றனர். பிரச்சனையைக் கிளப்ப செயல்படுகின்றனர். கோயில் பிரச்சனையில் அரசாங்கத்தால் அணுக முடியவில்லை. உங்கள் அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாக பேசுகிறார்கள். இந்து மத விரோத எதிர்ப்பு என்பதை இந்த நாடறியும்.. பெரியார் மண் என்று சொல்லும், இந்த மண்ணில் சாதியில் மக்கள் மனதில் ஏன் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை? சிதம்பரம் கோயில் பிரச்சனையில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

அப்போது செய்தியாளர்கள், உதயநிதியின் கடைசி படமான, மாமன்னன் படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு வானதி சீனிவாசன், என்னாது கடைசி படமா என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தார். “நான் அவ்வளவா சினிமாவை பார்ப்பது கிடையாது.. எப்போதாவதுதான் பார்ப்பேன். அதனால் மாமன்னன் படத்தை பற்றி எனக்கு தெரியாது.. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார் என்பது மட்டும் நிச்சயமா சொல்ல முடியும்.. ஏன்னா, அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்றார் வானதி சீனிவாசன்.