நேர்மையாக தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி தொழில்துறையில் தி.மு.க. அரசு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் கல்குவாரிகள் மற்றும் சுமார் 3 ஆயிரத்து 500 கிரஷர் யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் வினியோகம் இந்த ஆலைகளை நம்பியே இருக்கிறது. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் தொழில்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கல்குவாரிகளும் விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக குவாரிகளை பார்வையிடுகிறோம் என்ற பெயரில் தேவையற்ற புகார்களை கூறி ஆலை உரிமையாளர்களை அச்சுறுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி கல்குவாரி உரிமையாளர்கள், எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
குவாரி தொழிலை சார்ந்துள்ள லாரி தொழில், கட்டுமான தொழில் மற்றும் அதனோடு தொடர்புடைய சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் வீடுகள் கட்டி கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் தினசரி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். காலதாமதம் இன்றி குத்தகை உரிமம் வழங்கப்பட வேண்டும். சிறு கனிமங்களுக்கு, சுரங்கத் திட்டம் வழியாக குத்தகை உரிமம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாமதமாகும் குவாரி உரிமம் புதுப்பித்தலை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் உலாவரும் போலி ஆர்வலர்கள் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மற்றும் அரசுக்கு தொடர்பு இல்லாமல் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். குவாரி உரிமத்துக்கு பொருத்தமற்ற விதிமுறைகளில் இருந்து விலக்கு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை குவாரி உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்து உள்ளனர்.
நேர்மையான முறையில் தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் தி.மு.க. அரசு, உடனடியாக கல்குவாரி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும், இந்த துறை மட்டுமல்லாது அனைத்து தொழில் துறைகளிலும் சமூகவிரோதிகள் தலையிடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.