பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடி ஊழல்வாதிகள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. இதுதொடர்பாக கடந்த 23-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். அடுத்தகட்டமாக பெங்களூருவில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.
பீகாரின் மங்கரில் நடந்த பா.ஜனதாவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஊழலுக்கு எதிராக பீகார் மாநிலம் எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த ஊழல்வாதிகளுக்கு 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். ராகுல் காந்தியை மிகப்பெரும் தலைவராக காட்டுவதற்கு கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. மோடி மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது? என நிதிஷ்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார். ஆனால் பீகாருக்காக நிதிஷ்குமார் என்ன செய்தார் என்பதை அவர் வெளியிட வேண்டும். அவர் எப்போதும் தனது கூட்டணி கட்சிகளை மாற்றி வருகிறார். அவர் நம்பகமானவர் அல்ல. நிதிஷ் எப்போதுமே தனது கூட்டணியை மாற்றி கொண்டு லாலு பிரசாத்தை தவறாக வழி நடத்துகிறார். மகாபந்தன் கூட்டணிக்காக பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தியை மக்கள் தலைவராக காண்பிக்க காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மறுபுறம் மருத்துவக்கல்லூரிகள், விரைவுச்சாலைகள், பாலங்கள், புதிய இருப்புப்பாதைகள், மின் திட்டங்கள் என பல உள்கட்டமைப்பு திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.