தமிழ உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கெளதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி. பொன்.கெளதமசிகாமணி ஆகிய இருவரையும் தவிர, மற்ற 5 பேரும் ஆஜரானார்கள். இருவரும் ஆஜராகாத காரணத்தை அவர்களது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.