நாமக்கல் அருகே கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற 3 பேர் உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் மொபட்டுடன் தவறி விழுந்த பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த அபினேஷ், பிலிப்பகுட்டை பகுதியை சேர்ந்த நித்திஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் பிலிபாக்குட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது, கணவாய்பட்டி சாலையில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியதாக சொல்லப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து பைக்கோடு சாலையோரம் இருந்த திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் விழுந்தனர். 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் விழுந்ததும் சிறுவர்கள் மூன்று பேரும் தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பியுள்ளனர். கிணற்றிற்குள் விழுந்த அபினேஷின் தந்தை குப்புசாமிக்கு இந்த தகவல் கிடைத்ததும் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற குதித்துள்ளார். அவருடன் சரவணன், அசோகன் ஆகிய இருவரும் மூன்று மாணவர்களையும் காப்பாற்ற கிணற்றில் குதித்திருக்கின்றனர்.

கிணற்றுக்குள் இருந்த சேற்றில் காப்பாற்ற சென்றவர்களும் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கட்டிலை இறக்கினர். இதில் அபினேஷ், நித்திஷ்குமாரை உயிருடன் மீட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு மாணவர் மற்றும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த மூன்று பேரும் கிணற்றுக்குள் மயங்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிரேன் உதவியுடன் கிணற்றிற்குள் சிக்கிய நான்கும் பேரை மீட்கும் பணி நடைபெற்றது. கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய நிலையில் நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை மீட்க சென்ற மூன்று பேரும் ஒரு மாணவரும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலியான 4 பேரில் குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகிய 3 பேர் கே.கணவாய்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் மாணவன் விக்னேஷ் அருகிலுள்ள பிலிப்பாகுட்டை சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இதனால் இரு கிராமங்களும் பெரும் சோகத்தில் மூழ்கின‌‌. கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவன் உள்பட 4 பேரின் உடல்களுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனிடையே, கிணற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.