தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.4,100 கோடிக்கு கணக்கு இல்லை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் 2 நாளாக நடத்திய சோதனையில், ரூ. 4,100 கோடியை கணக்கு காட்டாத தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி வருமான வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள மெர்க்கண்டைல் வங்கியின் தலைமையகத்தில் சோதனை நடத்தினர். கடந்த 27ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 28ஆம் தேதி தான் முடிவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முக்கிய விபரங்களை நேற்று வெளியிட்டனர். தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி 10,000-க்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்ள ரூ.2,700 கோடிக்கும் அதிகமான ரொக்க டெபாசிட்கள் தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் (எஸ்எஃப்டி) அறிக்கையை தாக்கல் செய்யவில்லை, மொத்தம் ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்த்தபோது, ​​110 கோடி ரூபாய் மதிப்பிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், 200 கோடி ரூபாய்க்கு மேல் நடைபெற்ற டிவிடெண்ட் விநியோகம், மற்றும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட பங்குகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு அலவன்ஸ்களில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், வங்கியால் தாக்கல் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கைகள் பல அம்சங்களில் முழுமையடையாமல் காணப்பட்டுள்ளன. 500 கோடிக்கு மேல் வட்டி செலுத்துதல், கரன்ட் டெபாசிட்கள், கேஷ் டெபாசிட்கள் மற்றும் நடப்புக் கணக்குகளில் பணம் எடுத்தல் உள்ளிட்ட முக்கிய பரிவர்த்தனைகளின் விவரங்களை வங்கி தெரிவிக்கவில்லை. மற்ற நாடுகளில் வசிக்கும் கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான (AEOI) படிவம் 61Bஇல் பல்வேறு குளறுபடிகள் இருந்ததும் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. பரிவர்த்தனைகள் உட்பட மொத்தம் ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.