மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக இனக்குழுக்களிடையேயான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருக்ன்றன. இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 2 மாதாங்களாக தொடரும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசும் 50,000 ராணுவத்தினரை இறக்கியும் வன்முறை சம்பவங்கள் ஓயவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேரில் வந்து ஆலோசனை நடத்தியும் வன்முறைகள் தொடருகின்றன. அ
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களாக மணிப்பூரில் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அகதிகள் முகாம்களில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திடீரென ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன்சிங் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு நாடகம் நடத்தினார். இதற்காக ஆளுநர் அனுசுயா உய்கே சந்திக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவியை பைரேன் சிங் ராஜினாமா செய்யக் கூடாது என அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதுடன் அவரது ராஜினாமா கடிதத்தையும் கிழித்து எறிந்திருக்கின்றனர். இதுவும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தற்போது, மணிப்பூர் வன்முறைகளுக்கு அன்னிய சக்திகள்தான் காரணம்; அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதி காரணமாகவே மணிப்பூரில் வன்முறை தொடருகிறது என முதல்வர் பைரேன்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைரேன்சிங் கூறுகையில், மணிப்பூர் மாநிலமானது மியான்மர், சீனாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. 398 கி.மீ. நீள எல்லையில் பாதுகாப்பு கிடையாது. முன்னணி அரண்களில் மட்டும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதியாகத்தான் மணிப்பூர் வன்முறைகள் இருக்க முடியும். ஆனாலும் உறுதியாகவும் சொல்ல முடியாவில்லை என்றார்.
ராகுல் காந்தி பயணம் குறித்து கருத்து தெரிவித்த பைரேன்சிங், மணிப்பூருக்குள் யாரும் வரக் கூடாது என நாம் தடுக்க முடியாது. ஆனால் இதற்கு முன் ஏன் அவர்கள் வரவில்லை என்பதுதான் கேள்வி? ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர். அவர் எதற்காக மணிப்பூர் வர வேண்டும்? ராகுல் பயணம் மேற்கொள்ள இது சரியான தருணமும் அல்ல. அவருக்கு என ஒரு அரசியல் அஜெண்டா இருக்கிறது. ராகுல் வருகையின் போதுதான் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ராகுல் காந்தி வருகை தந்தாரா? அல்லது அரசியல் லாபங்களுக்காக வந்தாரா? எனவும் பைரேன்சிங் கேள்வி எழுப்பினார்.