அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம்.
பாஜக சார்பில் கரூரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக ‘மாற்றத்திற்கான மாநாடு’ என்ற தலைப்பில் நேற்று இரவு மாநாடு நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பாஜக முதல் ஆளாக தொடங்கிவிட்டது. பொதுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் என பரபரப்பு காட்டி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய கையோடு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார் அண்ணாமலை. நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாமலை, தனது சொந்த ஊரான கரூரில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதால் பாஜக தொண்டர்கள் கரூர் முழுவதும் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஓட்டியிருந்தனர். நாளைய தமிழகத்தின் முதல்வரே, நாளைய தமிழகத்தின் அரசியல் வரலாறே என்று பரபரப்பான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன், இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் கரூர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வந்தார். மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்துகள் அனுப்பி ஆட்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற இந்த மாநாட்டில் பெரும்பாலான சேர்கள் காலியாகவே இருந்தன. அண்ணாமலை பேசும்போதும், மாநாட்டில் முன் பகுதியில் மட்டுமே கூட்டம் இருந்தது. பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தும் காலி சேர்களாக இருந்தது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்தது.பாஜக மாநாட்டில் தலைவர்கள் பேசும்போது காலி சேர்கள் கிடைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், அண்ணாமலை பங்கேற்ற மாநாட்டிற்கு கூட்டம் வராததை கிண்டல் செய்து முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரி ரொம்ப கலரா சும்மா தக தகன்னு இருக்கீங்க.. என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு.. தம்பி ஆவூண்ணா கூட்டம் கூட்டமா மாநாடுனு கிளம்புகிறார்கள். அங்கே பார் தம்பி, ஒரு கூட்டமே ஆரஞ்சு பச்சை கொடி ஏந்தி ஆரவாரமா வருகிறார்கள். வரும் ஆனா வராது.” என சினிமா காட்சியை குறிப்பிட்டு பாஜக மாநாட்டை கிண்டல் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.
மேலும் மற்றொரு டுவீட்டில், “அவர் சொல்லும் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்ப்பது? காலி ஓ ஜிம்கானா. மேடையில் 200 பேர் ஒருவரையொருவர் நெருக்குகிறார்கள். மற்ற 200 பேர் முன்னால் இருந்து பார்க்கிறார்கள். பின்புறம் முற்றிலும் காலியாக உள்ளது. டெக்னிக்கலாக 400 பேர் கூடும் கூட்டத்தை மட்டும் 1000 பேர் ஆகக் காட்டுவது எங்கள் சினிமா டெக்னிக். உங்களுக்கான அண்ணாமலையின் கூட்டங்களின் உண்மையான ரிப்போர்ட் கார்டு இது” என மோடி, அமித் ஷா ஆகியோரை மென்ஷன் செய்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.