இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும் திராவிடமாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். “உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள்” மாநாட்டினை நீங்கள் நடத்தியபோது அதிலும் காணொலி மூலமாக கலந்து கொண்டு நான் உரையாற்றினேன். பெட்னா அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் எம்.எஸ்.எம்.இ. துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்சிம் நிறுவனம் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த முன்னெடுப்பின் முதல் கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்” என்ற அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது.
தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக் கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறார். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம். கழக ஆட்சி அமைந்ததும், பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு முன் 6-ம் நூற்றாண்டிலேயே நகர மயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது. அதேபோல், சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 என கண்டறியப்பட்டுள்ளது.
‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களான கொந்தகை, அகரம், மணலூர், தூத்துக்குடி மாவட்டம்-சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்-மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம்-வெம்பக் கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்-துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்து வருகிறது.
கீழடிக்கு அருகில் அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பொருளானது பொது ஊழிக்கு முன் 1615-ம் ஆண்டுக்கும், பொது ஊழிக்குமுன் 2172-ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறை தான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறது.
சிந்துவெளியில் ‘காளைகள்’தான் இருந்தன. இது திராவிடச் சின்னம்! சிந்து வெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும். இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்களும், பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ‘கீழடி அருங்காட்சியகம்’ தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து, திருநெல்வேலியில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று இரு கரம் கூப்பி அழைக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.