மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே: செங்கல்லை தூக்கிய அண்ணாமலை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகர்கோவில் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.1,264 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்படுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஜப்பான் நிறுவன நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், இன்னும் பணிகள் தீவிரப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஆவதை சுட்டிக்காட்டி திமுக, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்னாமலை, எய்ம்ஸ் மருத்துவமனை 2026- மார்ச்சில் மக்கள் பயன்பாட்டுக்க்கு வரும் என்றார். அண்ணாமலை கூறியதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனை 2026- மார்ச் மாதம் மக்கள் பயன்பட்டுக்கு திறக்கப்படும். அதற்காக இன்றைக்கு எய்ம்ஸ் நடக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது. 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். அவர்களுக்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்மஸ் மாணவர்கள் 150 பேர் படித்து கொண்டு இருக்கிறார்கள். எய்ம்ஸ்கான வேலை நடக்கிறது. 2026 மார்ச்சில் எய்ம்ஸ் வந்து விடும்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்.. (செங்கல் ஒன்றை கையில் தூக்கி காண்பித்த அண்ணாமலை) மதுரையில் இருக்கிற வேளாண் பல்கலைக்கழகம் எனது கையில் உள்ளது. ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீங்க.. செய்கிறவர்களையும் விட மாட்டீங்க.. கொடுக்கனும் நினைச்சாலும் பாராட்ட மாட்டீங்க. இவ்வாறு அவர் பேசினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது செங்கல்லை காட்டி பிரசாரம் மேற்கொண்டார். உதயநிதியின் இந்த செங்கல் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், உதயநிதி பாணியில் அண்ணாமலையும் செங்கல்லை கையில் வைத்து நாகர்கோவில் பாஜக கூட்டத்தில் திமுகவை விமர்சித்துள்ளார்.