மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (ஜூலை 3) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, முதல்வருக்கு உடல் சோர்வு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டம் முடிந்து பிற்பகல் 1.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். உடல் சோர்வு மற்றும் மாதாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு மாலையில் சென்றதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு இரைப்பை குடல் சம்பந்தமான சோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்தபிறகு முதல்வர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருக்கிறார். தமிழக முதல்வர் இந்த பரிசோதனைக்காக வழக்கமாக வந்து செல்வது வழக்கம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் முடிந்து நாளை (ஜூலை 4) வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.