அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த நேரமிருக்கும் பிரதமர் மோடிக்கு, ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் சேர்ந்து பாஜகவை எதிர்த்து வந்த தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவர் அஜித்பவார், தற்போது பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்களும் இணைந்தனர். இதில் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியும், முக்கியமான 8 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த நேரமிருக்கும் பிரதமர் மோடிக்கு, ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லை என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
தினந்தோறும் தேசியம் குறித்து வாய்கிழிய பேசியவர்கள் ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளனர். தற்போது, ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. ராணுவ வீரர்களுக்கு செலவிடும் அளவுக்கு மத்திய அரசிடம் நிதியில்லை என்பதை அக்னிபாத் திட்டம் மூலம் மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் மூலம் நம்முடைய பாதுகாப்பு அமைப்பை சார்ந்தவர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்திருக்கிறது. இந்த திட்டம் பெரிய அளவுக்கு முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நமது ஜவான்களிடையே மோதலை தூண்டுகிறது. இந்த அரசை பொறுத்த அளவில் தேசிய பாதுகாப்பு என்பது முன்னுரிமை அல்ல. மாறாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திசைத்திருப்புவதுதான் முக்கியமான பணி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டன் மூலம் ஒரு பதவியில் இருந்து பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 2014 ஜூலை 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும். நிலுவைத் தொகைகள் 4 தவணைகளில் வழங்கப்படும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் புதிதாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்குமான இடைவெளி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாது, இதன் மூலம் 25 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொள்ளாமல் பதவியை மட்டும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படுதற்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.