திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆபாசமாக பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. வானதி சீனிவாசனின் ஆபாச பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
திராவிட முன்னேற்ற கழகத்தோட எம்.எல்.ஏ, கவுன்சிலரா இருந்தா அவரு ஒரு வீட்டுல இருக்க மாட்டாரு. திராவிட முன்னேற்றக் கழகத்துல ஒரு பண்பாடு வெச்சிருக்காங்க. அவங்க காலையில் ஒரு வீட்டுல இருப்பாங்க- சாயங்காலம் ஒரு வீட்டுல இருப்பாங்க. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீன் அது. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் திமுகவினர் கடுமையான பதில் கொடுத்து வருகின்றனர். வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேற்று இரவு வானதி சீனிவாசன் மீது புகார் கொடுத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களை அவமதிக்கும் வகையில், அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திமுக நிர்வாகிகள் இன்று வானதி சீனிவாசனுக்கு எதிராக போலீசில் புகார் தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.