திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்: அர்ஜுன் சம்பத்

திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோயில் முன்சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஈவெரா சிலையை அகற்றிய வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைஷ்ணவ ஸ்ரீயையும் தயானந்த சரஸ்வதியையும் சேர்த்து பொய் வழக்கு புனையப்பட்டது. இதுவரை அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி அவரது மனைவி வாயிலாக தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளனர். மருத்துவ சிகிச்சைகள் முடிந்தும் அவரை சிறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார். இந்த தீர்ப்பு நிலைநாட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக அர்பன் நக்ஸல்கள், வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. இந்திய அரசுக்கும், இந்துக்களுக்கும் சனாதன தர்மத்துக்கும் எதிராக பல்வேறு காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். நீதித் துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. நீதி எல்லா விஷயங்களிலும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்குத்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற நல்ல காரியங்கள் நடைபெறக் கூடாது என கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிநாட்டு சக்திகளும் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றன.

திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர் நேரு, அவருடைய கட்சிக்காரர்கள் மீதே அனைத்து அஸ்திரங்களையும் ஏவி விடுவார். முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் இதற்கு உதாரணமாக திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை சொல்லலாம். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் போர்வையில் திமுக தலைவர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தில் கர்நாடகா அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து நிற்கிறார். இது அவர் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்தை பல இடங்களில் தடுக்கும் கேரள அரசுடன் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிமுகவினர் மீது புகார் கொடுத்துவிட்டு ஆளுநரிடம் அந்த கட்சி அமைச்சர்களை நீக்கக் கோரியவர்கள் திமுகவினர். அவருக்கு அதிகாரம் இருப்பதால்தான் மனு கொடுத்தீர்கள். ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவதால் அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். திமுக அரசை கலைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் வழிநடத்துகிறார்கள். அவராக சொந்தமாக செயல்படவில்லை. திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிதம்பரத்தில் கனகசபை அறிவிப்பையும் திருப்பரங்குன்றம், பழனியில் வைத்த அறிவிப்பையும் எடுக்க வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவினரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். 10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியுள்ளார். நடிகர் விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால் நேர்மையாக வர வேண்டும். கருப்பு பணம் வைத்திருக்கக் கூடாது. லஞ்சம். ஊழல் செய்ய கூடாது. சாராயம் ஒழிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ய வேண்டும். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக அத்தனை சக்திகளையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம். ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் மருத்துவமனையில்தான் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.