மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவு தான் தற்போது உடைந்து விட்டது. அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அதிமுக உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை, சிதறவும் இல்லை. கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை உறுப்பினர் சேர்க்கை மூலம் நிரூபித்துக் காட்டி உள்ளோம். அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இருமாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டி.கே.சிவக்குமார் செயல்படுகிறார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பான முறையில் செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். கடலூரில் காய்ச்சல் சிகிச்சைக்கு வந்தவருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் நிர்வாக திறமையே இல்லை. இனியாவது திமுக அரசு தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

”மத்திய அரசு அறிவித்துள்ள பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்குமா?” என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ”பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதால் அதனை எந்த வடிவிலும் நிறைவேற்ற கூடாது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அதிமுக தெளிவாக கூறி இருக்கிறது” என்றார்.

தக்காளி விலை உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை சாமான்கள் விலையும் உயர்ந்து விட்டது. குட்டி அமைச்சர் ஒருவர் வந்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம் எடுக்கிறார் அவரே படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். விலைவாசி உயர்வை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. அவரிடம் போய் செய்தியாளர்கள் விலைவாசி உயர்வை பற்றி கேள்வி கேளுங்கள் என்றார். நீங்களே மாமன்னன் படம் பற்றிதான் கேட்கிறீர்கள் இதுவா வயிற்றுப்பசியை போக்கப்போகிறது என்றார்.

அந்த படத்தைப் பற்றி நிறைய விமர்சனம் வேறு உள்ளது. மாமன்னன் படத்தில் வேதனைக்குறிய விசயம் உள்ளது. இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். இது பொய்யான தகவல். நான் முதல்வராக பதவியேற்ற போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் சபாநாயகர் தனபால் சட்டசபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அவரது மைக்கை உடைத்து பெஞ்சை உடைத்து பெரிய ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபால் அவர்களின் சட்டையை கிழித்தனர். புனிதமான இருக்கையில் அமர்ந்தனர் திமுகவினர். இவர்களா சமூக நீதியை காப்பாற்றியவர்கள். இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்கிறார்களா என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மாமன்றத்தில் அமர்ந்திருந்த சபாநாயகரை இழுத்து கீழே தள்ளினார்களே அந்த சம்பவத்தை தொலைக்காட்சி மூலம் அனைத்து மக்களும் பார்த்தனர். அதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை கீழே இறக்கி எங்களோடு அமர வைத்தீர்களே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துள்ளதாக பேசுவதற்கு திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுகதான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான். அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி புரட்சியால்தான் அனைவரும் கல்வி கற்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதைப்பற்றி வேறு எந்த கட்சியினரும் பேசுவதற்கும் தகுதி இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, இப்போது தேர்தல் இல்லையே என்று தெரிவித்தார், தேர்தல் வருவதற்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது என்றும், தேர்தல் வரும் போது யாருடன் கூட்டணி என்று உங்களை எல்லாம் அழைத்து எந்தெந்த கட்சியோடு கூட்டணி அறிவிப்போம் என்றும் ஏற்கனவே பாஜக பற்றி நாங்கள் சொல்லியாச்சு என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பாஜக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் கூறுகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அங்கே போய் கேளுங்கள் என்று சொன்னார். எங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேளுங்கள் நாங்க வந்து தெளிவாக இருக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேர்தல் கூட்டணி வைக்கப்பட்ட போது கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளை இப்போது கடைபிடிப்போம். காலம் கணிந்து வரும் போது வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது. அவசரமில்லை. பாஜக உடன் உறவு எப்படி இருக்கிறது என்று ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கூட்டணி பற்றி தொடர்ந்து கேள்விகள் வரவே.. நன்றி வணக்கம் என்று கூறி விடைபெற்றார் எடப்பாடி பழனிச்சாமி.