பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்: நிதின் கட்கரி

இனி அனைத்து வாகனங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கா் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:-

விவசாயிகள் வேளாண் விளைபொருள்களை மட்டுமல்லாமல் எத்தனால், சூரியஒளி மின்சாரம் உள்ளிட்ட ஆற்றலை உற்பத்தி செய்பவா்களாகவும் உள்ளனர். இனி அனைத்து வாகனங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும். இதனால் எரிபொருள் இறக்குமதி குறைவதுடன் விவசாயிகளும் பயன்பெறுவர். சராசரியாக 60 சதவீத எத்தனால் மற்றும் 40 சதவீத மின்சாரம் வாகனங்கள் இயக்கப்பட்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மேலும் காற்று மாசுப்பாடு குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடப்படும் 16 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்லும்.

வாகனத் துறையின் தற்போதைய வருவாய் ரூ.7.55 லட்சம் கோடி. நான்கரை கோடி பேருக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதிகபட்ச சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தத் துறையிலிருந்தே வசூலாகிறது. இந்த வருவாயை ரூ.15 லட்சம் கோடியாக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி போ் வேலைவாய்ப்பு பெறுவர். வாகன உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.