கவர்னரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்: எச்.ராஜா

கவர்னரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், விமர்சிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும் எனவும் பாஜ.க, மூத்த தலைவர் எச் ராஜா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி ஒன்றில், கவர்னருக்கு அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம். அவரை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். கவர்னர் அரசியல்வாதியாக மாறக்கூடாது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் குறித்து விமர்சிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும். கவர்னரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். கவர்னர் விருப்பப்பட்டால் அமைச்சரை நியமிக்கலாம். சட்டரீதியாக தான் கவர்னர் செயல்பட்டு உள்ளார். முதல்வரை மட்டுமல்ல தனிப்பட்ட அமைச்சரையும் நீக்கும் அதிகாரம், கவர்னருக்கு உண்டு. பார்லிமென்ட் தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் வரும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.