தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக இத்தீர்ப்பை 30 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். ஆனால் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட உண்மை தகவல்களை மறைத்தது போன்றவற்றை சுட்டிக் காட்டி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் ரவீந்திரநாத் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து இத்தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் லோக்சபாவில் அதிமுகவுக்கு இனி ஒரு எம்பி கூட இல்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. அதிமுக வரலாற்றில் 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அக்கட்சி ஒரு இடம் கூட வெல்லவில்லை. அப்போதைய லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லை. அதேபோல 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் லோக்சபாவில் ஒற்றை எம்பியாக ரவீந்திரநாத் இருந்து வந்தார். தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒரு எம்பி பதவியையும் அதிமுக இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது. ஆனாலும் அதிமுகவுக்கு ஆறுதலாக, ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.