அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வருமானத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு விசாரித்து வருகிறது. இதனிடையே ஒன்றிய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவதூறாக பேசியதாக அவர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கஜேந்திர சிங் செகாவத் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கிரிமினல் அவதூறுக்காக கெலாட்டுக்கு எதிராக ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் தனது நற்பெயருக்கு உரிய நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது; ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி அசோக் கெலாட் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.