காவிரியின் உபரி நீரை தேக்கவே மேகதாதுவில் அணை: கர்நாடக அமைச்சர்!

காவிரியின் உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை துரைமுருகன் நேற்று சந்தித்தார். பின், துரைமுருகன் கூறுகையில், கர்நாடகா அரசிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சரிடம் கூறினேன். அவரும் அதிகாரிகளை அழைத்து, இது குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேகதாது அணை கட்டக் கூடாது. அதில் மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை. அதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே கூறியதாவது:-

கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம். கடலுக்கு செல்லும் உபரிநீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காக தேக்கி வைக்கவே அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுக்க மேகதாது அணை திட்டம் இல்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரியங் கார்கே கூறினார்.