மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ் என்று, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் அதை அனுமதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார். இவரது அண்ணன் மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, அஜித் பவார் துணை முதல்வராகவும், 8 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதை தீர்மானிக்க சரத் பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் தனித்தனியாக நேற்று புதன்கிழமை போட்டிக் கூட்டம் நடத்தினர். அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 29 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 13 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஒரு சில எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மகாராஷ்டிராவில் நடக்கும் இந்த அரசியல் நிலைமைகளை முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ‘தமாஷ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர அரசியலில் நடப்பது ஜனநாயகம் அல்லை. அது ஒரு தமாஷ். சட்டம் அதை அனுமதிப்பது போல் தெரிகிறது. அவை அதிகாரத்தின் ரொட்டித் துண்டுகளைப் பற்றியது. மக்களைப் பற்றியது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வருடம் மட்டுமே கடந்திருக்கும் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் தலைமையில் என்சிபி வந்து இணைந்திருப்பது சிவசேனா எம்எல்ஏகளுக்கு மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது கட்சி சகாக்களுடன் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “நான் இன்னும் முதல்வராகத்தான் இருக்கிறேன். மாநில அரசின் முழுக்கட்டுப்பாடும் என்னிடம்தான் இருக்கிறது. எனவே, கட்சியினர் யாரும் கவலைப்படவேண்டியது இல்லை. நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக யார் வதந்தி பரப்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். அடுத்த ஆண்டே மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் நான்தான் முதல்வர்” என்று தெரிவித்துள்ளார்.