ஆளுநர் கட்டுப்பாட்டில் ராஜ்பவன் இல்லையா?: அமைச்சர் ரகுபதி

ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு- பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலும் அளித்து விட்டு – முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே வரவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் மறைப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் ஆளுநர் ஆர் என் ரவி அவர்களுக்கு 3.7.2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக 6.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள ராஜ்பவன் பத்திரிக்கை செய்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

முன்னாள் அதிமுக அமைச்சர் திரு. கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவனில் இருந்து பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் – முன்னாள் அமைச்சர் திரு. கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விழிப்புணர்வு ஆணையத்தின் பரிந்துரை அனைத்தும் அடங்கியிருக்கிறது. 298 நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டு – கோப்பை பெற்றுக் கொண்டற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டு விட்டு இன்று உறுதி செய்யப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல.

ராஜ்பவன் வாதப்படி வைத்துக் கொண்டால் கூட – நான் ஆளுநருக்கு கடிதம் எழுதும் வரை அந்த கோப்பு குறித்து எந்த விவரமோ, விளக்கமோ கேட்டு தமிழக ஆளுநரிடமிருந்து கடிதமும் வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர் ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல் – இசைவாணையை நிறுத்தி வைத்து ஏன் இப்போது ஆதாரமற்ற ஒரு காரணத்தைச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.

இது மட்டுமின்றி – அதிமுக முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் இசைவாணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறையின் இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய ஒரிஜினல் கோப்பு – ஆளுநருக்கு 15.5.2023 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பை பெற்றுக் கொண்டதற்கு ராஜ்பவன் ஒப்புதல் கடிதமும் அளித்துள்ளது. நிர்வாக நடைமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்ட அந்த கோப்பு ராஜ்பவனுக்கு வரவில்லை என்று 53 நாட்கள் கழித்து ராஜ்பவன் வெளியிட்டிருக்கும் செய்தி வியப்பாகவும் – விந்தையாகவும் இருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டப்படியான பணிகள் செய்வதை கைவிட்டு – கட்சி அரசியல் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதையே தனது அலுவலகத்திற்கு வந்த கோப்பையே வரவில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது என்பதே உண்மை என்று தெரிகிறது. அல்லது ராஜ்பவன் அலுவலகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ராஜ்பவன் பத்திரிக்கை செய்தி ஆதாரமற்றது என்பதை எல்லாம் ஆதாரத்துடன் விளக்கி- முன்னாள் அமைச்சர்கள் டாக்டர். சி. விஜயபாஸ்கர், திரு. ரமணா ஆகியோருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து வழங்குமாறு சிபிஐ அமைப்பிடம் இருந்து 30.6.2023 அன்று மாநில அரசுக்கு வந்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்துக் கூறி- முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிடுமாறு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.