அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியான நிலையில், அவருக்கு ஆதரவாக வருகிற 12-ந்தேதி அமைதி போராட்டம் நடக்கும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதற்கு எதிராக, குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அக்கட்சியை சேர்ந்த பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கட்சியின் அனைத்து மாநில தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்த சூழலில், ராகுல் காந்தி தனியாக இல்லை என்றும், உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ்காரர்களும் மற்றும் வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் அவருடன் உள்ளனர் என மீண்டும் வலியுறுத்த நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணமிதுவாகும். வருகிற 12-ந்தேதி அனைத்து மாநில தலைமையகத்திலும் மகாத்மா காந்தி சிலைகளின் முன்பாக, பெரிய அளவிலான ஒரு நாள் அமைதி போராட்டத்தில் ஈடுபட ஏற்பாடு செய்யும்படி கேட்டு கொண்டு உள்ளார். இந்த போராட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்’ என அவர் கேட்டு கொண்டார்.